×

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங். கட்சியில் இருந்து விலகல்: பாஜவில் சேர்வது குறித்து 2 நாளில் முடிவு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் பாஜவில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாபா சித்திக், மில்லிந்த் தியோரா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து மாநில முன்னாள் முதல்வரும், எம்எல்ஏவுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலுக்கு சவான் எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்பித்துள்ளார். சவான் 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர். மேலும் முதல்வராக இருந்த சவான் ஆதார்ஷ் வீடு முறைகேடு ஊழல் குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள சவான் பாஜவில் இணையவுள்ளதாக மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.  மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சவான் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியில் நடப்பதை பொதுமேடையில் விவாதிக்கப்போவதில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவு எடுப்பேன். பாஜவில் சேர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜவின் செயல்பாடு முறை குறித்து தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது தனிப்பட்ட முடிவு. அதற்கு எந்த காரணத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை” என்றார்.

* துரதிர்ஷ்டவசமான முடிவு
காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ்: அசோக் சவான் எடுத்தது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு. அவரை போன்ற நபர் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பார் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தம் குறித்து எனக்கு தெரியவில்லை. கட்சியை விட்டு விலகியவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்.

* காங்கிரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பாஜ
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே(யூபிடி): பாரதிய ஜனதா கட்சியானது காங்கிரஸ் ஆக்கிரமிக்கப்பட்ட பாஜவாக மாறி வருகிறது. மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் மற்ற கட்சிகளை ஏன் அவர் உடைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ நேர்மையாக செயல்பட்டு இருந்தால் அது மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்களை இழுக்கும் நடவடிக்கையை நாடி இருக்காது. அசோக் சவானின் முடிவு ஆச்சரியமாக இருக்கிறது.

* துரோகிகள் உணர்வதில்லை
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் “நண்பர்களும், கட்சியில் உடன் இருப்பவர்களும் தங்களுக்கு தகுதியானதை விட அதிகம் கொடுத்த அரசியல் கட்சியை விட்டு வெளியேறினால் அது எப்போதும் வேதனைக்குரிய விஷயம். இந்த துரோகிகள் தங்களது வெளியேற்றம் மற்றவர்களுக்கு பரந்த புதிய வாய்ப்புக்களை திறக்கிறது என்பதை உணரவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங். கட்சியில் இருந்து விலகல்: பாஜவில் சேர்வது குறித்து 2 நாளில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Former ,Maharashtra ,Chief Minister ,Ashok Chavan Kang ,BJP ,Mumbai ,Congress ,MLA ,Ashok Chavan ,Congress party ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…